74 வயதில் அமைதியைத் தேடி ஒரு சட்டப் போர்

74வயதில் அமைதியைத் தேடி ஒரு சட்டப் போர் (புத்தகத்தின் தலைப்பு:)

(நீதிமன்றங்களுக்கு வெளியே சட்டச் சிக்கல்களை களைந்து நிம்மதியைத் தேடும் ஒரு முதியவரின் அனுபவப் பகிர்வு)

முன்னுரை

ஏக இறைவனின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன். (31/12/2025)

யார் அந்த 'நான்'?

"முஹம்மது" என்ற உடலில் சிறைபட்டு, அதிலிருந்து வெடித்து வெளியேறத் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு 'ரூஹ்' (ஆன்மா) தான் நான்.

இன்னும் 60 நாட்களில் நான் 75 வயதைத் தொடப் போகிறேன். இந்தப் பயணத்தைத் தொடங்கும் முன் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர விரும்புகிறேன். இறைவன் எனக்கு வழங்கிய மிகப்பெரிய அருட்கொடை எனது குடும்பம். எனது மூத்த மகள் (டிசம்பர் 4) மற்றும் மூத்த பேரன் (டிசம்பர் 1) ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு, தேனி அனிபா உணவகத்தில் மதிய உணவும், அதைத் தொடர்ந்து பண்பார்க் விளையாட்டுகளுமாக அன்றைய பொழுது இனிமையாகக் கழிந்தது.

ஒரு தற்செயலான ஒற்றுமை என்னவென்றால், 2008 டிசம்பர் 1-ம் தேதி நான் ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா நகரில் காலடி வைத்தேன். அதே நாளில்தான் எனது மூத்த பேரன் பூவுலகில் பிரவேசித்து, என்னை 'தாத்தா' எனும் நிலைக்கு உயர்த்தினான்.

ஒரு முஸ்லிம் ஹஜ் முடித்த பிறகு, எஞ்சிய வாழ்நாளை இறை நெறிப்படி வாழ வேண்டும். ஆனால், நான் இறைவனின் ஏவல் விலக்கல்களைப் பேணி வாழ்ந்தேனா என்றால், 'இல்லை' என்பதே பதில். அந்தத் தவறுதான் இன்று எனது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஆதிமூலம்.

இந்தத் தொகுப்பு இரண்டு பகுதிகளைக் கொண்டது:

பகுதி 1: எனது அந்தரங்க உலகம் (My Secret Garden)

எனது உடலையும் ஆன்மாவையும் பேணிப் பாதுகாத்து, வாழும் காலத்தை அர்த்தமுள்ளதாக நீட்டிப்பதே இப்பகுதியின் பிரதான நோக்கம். இந்த நோக்கத்திற்கான விடையைத் தேடி, 130 பக்கங்கள் கொண்ட "தன்னை அறிதல்" என்ற இஸ்லாமிய வாழ்வியல் புத்தகத்தில் மூழ்கி முத்து எடுக்க முயற்சி செய்துள்ளேன்.

இந்தத் தத்துவங்களை முழுமையாக உள்வாங்க "தரிக்கத்தின் அவசியம்" என்ற 40 பக்க புத்தகத்தை ஒரு நுழைவாயிலாகக் கருதி, தினமும் பத்து நிமிடங்கள் இவற்றை வாசித்து வருகிறேன். இந்த ஆய்வுகளின் சாரத்தை இஸ்லாமிய பார்வையில் நான் யார்?” என்ற ஆய்வுக் கட்டுரையாகத் தொகுத்துள்ளேன் (இணைப்பு - 1).

பகுதி 2: பூவுலக வாழ்வின் தப்பாட்டங்களும் விளைவுகளும்

​"தப்பாட்டங்களும் விளைவுகளும்" - இந்தச் சொல் என் வாழ்வின் எதார்த்தத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. 75 வயதில் நான் முன்னெடுக்கும் இந்த "சட்டப் போர்" என்பது வெறும் சொத்துச் சிக்கல்களைக் களைவது மட்டுமல்ல; இது நீதியை நிலைநாட்டப் போராடும் ஒரு முன் உதாரணமாகும்.

மனிதர்கள் எப்படி ஏமாற்றுவார்கள் என்ற அடிப்படை அறிவு இல்லாமல், கடந்த 15 ஆண்டுகளில் சொத்துக்கள் வாங்குவதிலும் விற்பதிலும் நான் சந்தித்த சிக்கல்கள் ஒன்றல்ல, இரண்டல்ல... மொத்தம் ஏழு! பூம்பாறை, பெரியகுளம் மற்றும் தேனி ஆகிய இடங்களில் ஏற்பட்ட அந்த ஏழு பிரச்சனைகளை இங்கே பட்டியலிடுகிறேன்:

  1. என்ன நடந்தது? (சுருக்கமான பின்னணி)
  2. எப்படி ஏமாற்றப்பட்டேன்? (அறிவின்மையால் செய்த தவறுகள்)
  3. தற்போதைய சட்ட நிலை என்ன?

வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு என்றால், நான் சில காய்களைத் தவறாக நகர்த்தினேன். ஆனால், அதிகார வர்க்கம் தன் கடமையில் இருந்து தவறும்போது, அவர்கள் ஆடும் ஆட்டத்தைச் சட்ட விதிகளாலேயே முறியடிக்கவும், பொதுவெளியில் அறம் பாடி தீமையை அழிக்கவும் நான் துணிந்தேன். இதனை "பங்கேற்பு நடவடிக்கை ஆராய்ச்சி" (Participatory Action Research - PAR) என்ற கோணத்தில் பதிவு செய்கிறேன்.

போராட்டத்தின் மூன்று கட்டங்கள்:

  • முதற்கட்டம் - அரசு அதிகாரிகள்: ஒரு மூத்த குடிமகன் வஞ்சிக்கப்படும்போது முதலில் அதிகாரிகளையே அணுக வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான மனுக்களை அளித்தும், அதிகாரிகளை நேரில் சந்தித்தும் எனக்குக் கிடைத்தது "மன உளைச்சலும் விரக்தியும்" மட்டுமே.
  • இரண்டாம் கட்டம் - நீதிமன்றம்: "பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்தால், நீதித்துறையை நாட வேண்டிய அவசியம் இல்லை" என்று 2011-ல் நீதிபதிகள் எலோப் தர்மாராவ் மற்றும் கே.கே. சசிதரன் ஆகியோர் குறிப்பிட்டனர். நீதிமன்றத்தின் மூலம் எனக்கு விரைவான நீதியோ அல்லது நிம்மதியோ கிடைக்காது என்பது எனது ஆழமான நம்பிக்கை.
  • மூன்றாம் கட்டம் - மக்கள் நீதிமன்றம்: குற்றவாளிகளைத் தண்டிப்பது எனது நோக்கமல்ல. எனது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதே எனது இலக்கு. நீதியைத் தேடி நிம்மதியைத் தொலைத்தவன் என்ற அடிப்படையில் நான் மக்கள் மன்றத்தை நாடுகிறேன்.

சமூக வலைத்தளங்கள் (Facebook, Instagram, YouTube) மூலமாக எனது போராட்டத்தைத் தொடர்ந்து 100 நபர்களுக்குப் பகிரத் திட்டமிட்டுள்ளேன். அவர்களுக்கும் எனக்குமான உரையாடல்களை “Self-help Through Mutual-help” என்ற கோட்பாட்டின் கீழ் ஆவணப்படுத்துவேன். தனிமனித ரகசியங்களைப் பாதுகாக்க, அவர்களின் பெயர்களுக்குப் பதில் எண்கள் (1, 2, 3...) பயன்படுத்தப்படும்.

எனது தந்தை அடிக்கடி சொல்வார்: "சொத்துக்காகவோ பணத்திற்காகவோ போராடாதே, உலகம் பெரியது. அதைத் தவிர்த்துவிட்டு உழைப்பில் கவனம் செலுத்து" என்று. எனது தாயோ, "அவர்கள் எல்லாம் காரியவாதிகள், நீயோ ஒரு ஏமாளி" என்பார்.

சரி... வாருங்கள், எனது அனுபவங்களுக்குள் நுழைவோம்.

Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

பொதுவெளியில் விவாதம்